வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புனாணை 211வி மீள் குடியேற்ற கிராம சேவகர் பிரிவில் வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் இன்று நேரில் சென்று(06) பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
அவருடன் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.தாஹிர் மற்றும் ஜே.எம்.முனாஸ் ஆகியோர் உடன் சமூகமளித்திருந்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் சேதமடைந்த ஒவ்வொரு வீடுகளையும் பார்வையிட்டார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் வீடுகளை புணருத்தாரணம் செய்து வழங்குவதற்கான ஆலோசனையை மாவட்ட அனர்த்த சேவைப் பிரிவு மற்றும் வாகரை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக இதன்போது தெரிவித்தார்.
வீடுகளின் கூரைகள் சுழல்காற்றின் வேகத்தினால் தூக்கி வீசப்பட்டதனாலும் பெய்த மழை காரணமாக வீட்டினுள் இருந்த பொருட்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்பன சேதமடைந்து காணப்படுவதாகவும் தெரிவித்தார். இவர்களுக்குரிய பாடசாலைகு கற்றல் உபகரணங்களை வழங்க கல்வித் திணைக்களம் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன்போது 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் பாதிக்கப்பட்ட மக்களை அப்பகுதியில் உள்ள முன்பள்ளியில் தங்க வைத்துள்ளதுடன் சமைத்த உணவுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இது வரை அரசினால் எது வித சமைத்த உணவும் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் அனர்த்த சேவைப் பிரிவு நேரில் சென்று பார்வையிடவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குறை கூறுகின்றனர். இதேவேளை வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஹைதர்அலி நேற்று சென்று (5)பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கியிருந்தார்.
சேதமடைந்த வீடுகளின் விபரங்களை பிரதேச கிராம சேவகர் மற்றும் பொலிஸார் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


