வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான, ‘நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விநியோகத் திட்டம்’ வடக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களுடன் இணைந்து யாழ். போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் மலரவன் தலைமையில் இன்று(31) முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கான நிதி அனுசரணையை அலாகா அறக்கட்டளை மூலம், வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனை முன்னெடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட 1,150 ஆசிரியர்கள் பயிற்றப்பட்டனர்.
அவர்கள் ஊடாக கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர் மலரவன் தலைமையிலான குழுவினர் கண்பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
வடக்கிலுள்ள 9,313 மாணவர்கள் சுமார் 4.49 சதவீதத்தினர் கண்ணாடி தேவையுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த ஒட்டுமொத்த செயன்முறை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நூல் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிச் செயலாளர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

