முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் தலைவருமான திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் மாவட்ட பயன்பாட்டுக் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது நீண்ட கால குத்தகையில் வர்த்தக நிலையங்கள் அமைந்த காணித்துண்டுகள், புதிய அரச வன பகுதியில் அமைந்த காணித் துண்டுகளை நீண்ட கால குத்தகையில் வழங்குதல், பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் காணிகளை கையளித்தல், நீண்டகால குத்தகையில் காணி வழங்குதல், காணிக் கச்சேரிக்கு அனுமதி வழங்குதல் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண காணி ஆணையாளர் திரு.குருபரன், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திருமதி.ச.மஞ்சுளாதேவி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயகாந்(காணி) , மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கு.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரி, மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

