கொழும்பு – கொட்டாஞ்சேனையில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் மானிப்பாயில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயலுக்கு உதவி புரிந்தமை தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு காவல்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும், யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

