அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 2025.11.19ஆந் திகதி சபையின் 05ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட போது, தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், உதவி தவிசாளர் எம்.எப். நஜீத், உறுப்பினர்களான எம்.ஏ. அன்ஸில், றியா மசூர், எம்.எஸ்.எம். நியால், எம்.எல். றினாஸ், ஐ.ஏ. சிறாஜ், ஐ.எல். அஸ்வர் ஸாலிஹ், ஏ.எல். பாயிஸ், எஸ்.ஐ.எம். றியாஸ், ஏ.சீ.எம். நியாஸ், காமினி த சில்வா, எம்.எஸ்.எப். நஜா ஆகியோர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவும், எம்.எல்.ஏ. சமன், சீ.எம். ஜனூசா, எஸ். பாஹிமா ஆகியோர் எதிராகவும் வாக்களித்ததுடன், ஏ.எல். அமானுல்லா மற்றும் எம்.எப். மின்ஹா ஆகியோர் சபைக்கு வருகைதரவில்லை என 2025.11.19ஆந் திகதிய 2025/11/19/05/89ம் இலக்க தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், முன்னாள் தவிசாளரும் உறுப்பினருமான எம்.ஏ. அன்ஸில் 2025.12.17ஆந் திகதி நடைபெற்ற ஆறாவது கூட்டத்தொடரில் பேசும்போது, ‘உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் ஸாலிஹ் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு வேளையில் சபையில் இருக்கவில்லை. ஆனால், வாக்கெடுப்பில் அவர் கலந்து கொண்டு வாக்களிதத்தாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பிழையான முன்னுதாரணமாகி விடலாம் என்பதால், உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் ஸாலிஹ் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை’ என்ற விடயத்தை தெளிவாக குறிப்பிட்டு கூட்டறிக்கையை திருத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.
அதற்கு தவிசாளரும் உடன்பட்டு உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் ஸாலிஹ் வாக்கெடுப்பில் கலந்து கொண்டதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கி விடுவதற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு உறுப்பினர் எம்.ஏ. அன்சிலின் உரை சான்றாக உள்ளது.
உறுப்பினர் எம்.ஏ. அன்ஸில் கூறிய கருத்தின் அடிப்படையில், 2025.11.19ஆந் திகதிய கூட்டறிக்கையில் ஐ.எல். அஸ்வர் ஸாலிஹ் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது முற்றிலும் பொய்யாகும்.
பிரதேச சபையின் கூட்டறிக்கை என்பது ஒரு சட்டரீதியான பொது ஆவணமாகும். இது தேவையேற்படும் சந்தர்ப்பங்களில், நீதிமன்றம், விசாரணைகள், கணக்காய்வு ஆகியவற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளக்கூடிய ஆவணமாகும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆவணத்தில் பொய்யான தகவல்களை சேர்ப்பது அல்லது பாதகமான விடயங்களை நீக்குவது ஆவண மோசடியாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, கொந்தராத்து விடயத்தில் தவிசாளர் தனக்கு அநீதி இழைத்து வருவதனால், வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக நான் வாக்களிக்க மாட்டேன் என உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் ஸாலிஹ் சக உறுப்பினர் ஒருவரிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தார். ஆனால், கூட்டறிக்கையில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் ஸாலிகிற்கு எதிராக கட்சி ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தில் தவிசாளர் உவைஸ் ஊடாக டிசம்பர் மாதத்திற்கான கூட்டறிக்கையை அவர்களுக்கு ஏற்றது போல் மாற்றியமைத்துள்ளனர்.
அதாவது, உறுப்பினர் அஸ்வர் சாலிஹ் வாக்கெடுப்பின் போது மலசலகூடம் சென்றதாகவும், ஆரம்பத்தில் ஆதரவளித்துவிட்டே வெளியில் சென்றதாகவும், பின்னர் சபைக்கு வந்த போது தவிசாளர் மீண்டும் அஸ்வர் சாலியிடம் ஆதரவா இல்லையா எனக்கேட்ட போது, அவர் ஆதரவு என்று கூறியதாகவும் கூட்டறிக்கையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கான வாக்களிப்பு ஒரு தடவையே மேற்கொள்ளப்பட்டது. அந்த வேளையில் அவர்கள் சபையில் இருக்கவில்லை என்பது திருத்தப்பட்ட கூட்டறிக்கையிலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
உறுப்பினர் ஐ.எல். அஸ்வரை பாதுகாப்பதற்காக தவிசாளர் உவைஸ் எடுத்த பிரயர்த்தனம் மிகவும் ஆபத்தானதாகும். தவிசாளரின் செயற்பாடானது கௌரவமான சபையையும் சபை உறுப்பினர்களையும் அவமதிப்பாக உள்ளது.
எனவே, தனிப்பட்ட ஒரு காரணத்திற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு அதே கட்சிப் பிரதிநிதியான உறுப்பினர் ஐ.எல். அஸ்வர் ஸாலிஹ் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். இந்த விடயம் குறித்து கட்சி முழுமையாக கவனம் செலுத்தி ஐ.எல். அஸ்வர் ஸாலிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களது நிலைப்பாடாகும்.

