மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்றிரவு(23) 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூன்று இளைஞர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த சிறிய லொறி ரக வாகனத்துடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். ஏனைய இருவரையும் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய வாலிபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் கலைமகள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய அஸ்மத் சஹி மற்றும் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஆக்மல் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டன. விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணையதிகாரி நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
ஏறாவூர்ப் பொலிஸாரும் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

