கலாசார அலுவல்கள் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கலாசாரத் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்ற “கலைஞர் சுவதம் 2025” நிகழ்வு இன்று(18) பொத்துவில் பிரதேச செயலாளர் அஹமட் நஸீல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்களான இலங்கேஸ்வரன், கேதீஸ்வரன் மற்றும் முகம்மட் அஸ்வர் ஆகியோரின் கலைப்பணிகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், கவிஞரும் எழுத்தாளருமான பொத்துவில் அகமது பைசல் ஶ்ரீதனது “கயறி” சஞ்சிகையை பிரதேச செயலாளருக்கு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சுபைர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் றின்சான், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் விசேட அம்சமாக, கலைஞர் கேதீஸ்வரன், பிரதேச செயலாளர் அஹமட் நஸீலின் உருவப் படத்தைத் தனது கைகளால் வரைந்து, அதனை அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கலைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் இத்தகைய நிகழ்வுகள் சமூகத்தில் கலாசார விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

