அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் சிறுபோக நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இதனை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா நெல் கொள்வனவு நிலையத்துக்கு நேரில் விஜயம் செய்து, கொள்வனவுச் செயற்பாடுகள், நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு உள்ளிட்ட விடயங்களை களத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். என். எம். மனாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் அறுவடைகளை அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம். எஸ். எம். நளீர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, நியாயமான விலையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நெல் கொள்வனவுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடனும் தடையின்றியும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதேச செயலாளர் அறிவுறுத்தியதுடன், தகுதிவாய்ந்த நெல்லை அரசாங்கத்தின் கொள்வனவு நிலையங்களுக்கு கொண்டு வந்து இத்திட்டத்தின் பயனைப் பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

