“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “தூய இலங்கை” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு, “நேர்மை கலாசாரம் – தூய இலங்கை” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (27) தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

 

மாவட்ட முகாமையாளர் மொஹான் அபேசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தவிசாளர் எச். அப்துல் சத்தார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட காரியாலயத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

 

தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அனைத்து உத்தியோகத்தர்களும் “நேர்மை கலாசாரம் – தூய இலங்கை” என்ற தொனிப்பொருளின் கீழ், அரச சேவையில் நேர்மை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து, “Clean Sri Lanka 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 10 முக்கிய அம்சங்கள் மற்றும் அவற்றின் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் தொடர்பாக பிரதம அதிதி தனது உரையில் விரிவாக விளக்கமளித்தார்.

 

தனது உரையில், தூய்மையான, ஒழுக்கமான மற்றும் பொறுப்புணர்வுமிக்க இலங்கையை உருவாக்குவதில் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரின் பங்களிப்பும் முக்கியமானது எனக் குறிப்பிட்டதுடன், அரச நிறுவனங்களில் நேர்மையான பணிக்கலாசாரம், வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த சேவை வழங்கலின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

மேலும், “தூய இலங்கை” தேசிய செயற்றிட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

 

இந்நிகழ்வு, “நேர்மை கலாசாரம் – தூய இலங்கை” என்ற இலக்கை முன்னிறுத்தி, தூய்மையான சுற்றுச்சூழல், ஒழுக்கமான சமூகம் மற்றும் பொறுப்பான குடிமக்களை உருவாக்கும் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான உறுதியை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *