நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் விசேட சுகாதார பரிசோதனைகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் மற்றும் பேரீச்சம்பழ மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தலைமையில் நடைபெற்ற இப்பணிகள், சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் மதனின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டன.
பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறைகள், காலாவதி திகதிகள், சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக நோன்பு காலத்தில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம்பழங்களின் தரநிலைகள் மற்றும் பாதுகாப்பான சேமிப்பு நடைமுறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து, சேமித்து, விற்பனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக வர்த்தகர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுகளைப் பெறுவதை உறுதி செய்வதே இவ் விசேட சுகாதார பரிசோதனைகளின் முக்கிய நோக்கமாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *