போதைப்பொருள் பாவனையற்ற மாதிரிக் கிராமத்தை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப் பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று(08) இடம்பெற்றது.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரிக் கிராமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்பக்கட்டமாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் ஈச்சந்தீவு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் நொச்சிமுனை, மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவில் மகிழடித்தீவு தெற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் பிறைந்துறைச்சேனையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான முற்தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
போதைப் பொருள் பாவனையாளர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு இதன் போது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவமாது, போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


