புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தை முகாமை செய்வதற்கான அபிவிருத்திக் குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும் இன்று(27) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது சாய்ந்தமருது மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி நௌசாத்தின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் முஆபிக்கா தலைமையில் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி நௌசாத் கலாசார மத்திய நிலையத்தின் தொழிற்பாடுகள், எதிர்கால வேலைத்திட்டங்கள், மேம்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அபிவிருத்திக் குழுவினருக்கு விளக்கினார்.
மேலும், இந்த கலாசார மத்திய நிலையத்தின் இவ்வருட நிர்வாகத்தின் தலைவராக மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி நௌசாத், செயலாளராக மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் கலைஞர் அஸ்வான் மௌலானாவும், உபதலைவராக ஆசிரியரும், கலைஞருமான மாஹிர் , உப செயலாளராக அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் கலைஞர் நூருல் ஹுதா உமரும், பொருளாளராக பதவி வழியில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் வளவாளர் ஹபீழ் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக கலைஞர்களான சாஹிர், இஸ்ஸதீன், முபாரக், அலாவுதீன், பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் முஹம்மட், கலாசார உத்தியோகத்தர் தௌபீக், பிரதேச செயலக உத்தியோகத்தர் இம்தாத், கணக்காய்வாளராக ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் அஸ்ரப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த அபிவிருத்தி முகாமைத்துவக் குழுவினர் தொடர்ந்தும் கலாசார மத்திய நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவின் ஆலோசகர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் முஆபிக்கா, கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் பழீல், கலைஞர் மருதூர் அலிகான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சபிக்கா, கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

