யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிய அவசர விசாரணைகள் முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். மேலும் துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
விபத்துக்குள்ளான படகு கடற்பயணத்திற்குப் பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, மேலும் கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள், குறிப்பாக உயிர் காப்பு அங்கிகள் போன்றவை முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மீட்பு நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் ஏற்படக்கூடாது என வலியுறுத்திய அவர், கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை தீவிரப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை, விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை தொடர்பாகவும் வைத்தியசாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

