அம்பாறையில் கஞ்சாவுடன் இரு நபர்கள் கைது

அம்பாறை நகரத்திற்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை பொல்வத்த பகுதியிலிருந்து அம்பாறை நகரத்திற்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கொண்டு வந்த இருவர் நேற்று மாலை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒருவரை அம்பாறை கோவில் அருகே கைது செய்ததுடன் மற்றொருவரை அம்பாறை புறநகர் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தபோது கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், ஒரு சந்தேக நபரிடம் 50 கிராம் கஞ்சாவும் மற்றொரு சந்தேக நபரிடம் 250 கிராம் கஞ்சாவும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக இச்சந்தேக நபர்கள் பல்வேறு வழிகளில் அம்பாறை நகரத்திற்கு கஞ்சாவை கொண்டு வந்து விற்பனைக்காக வழங்கி வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொல்வத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் வாவின்ன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *