திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றி, பின்னர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஸ்ரீபதிக்கான பிரியாவிடை வைபவம் நேற்று(11) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை நிர்வாக சேவை தரம் – I அதிகாரியான ஸ்ரீபதி தம்பலகாமம் பிரதேச செயலாளராக திறம்பட பணியாற்றியதுடன், தற்போது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையாற்றி வருகின்றார். இதற்கு முன்னர் குச்சவெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதேச செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில் மூவின மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தி, அவர்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்று சிறந்து விளங்கிய பெண் நிர்வாக அதிகாரியாக திகழ்ந்தார்.
பிரியாவிடை நிகழ்வின்போது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டதுடன், சக உத்தியோகத்தர்களினால் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய காலத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து, பல விருதுகளைப் பெற்ற பெருமையும் இவருக்கே உரியது. பெண் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான சிறந்த முன்னுதாரணமாக ஊழியர்களின் மனதில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பிரசாந்தன், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

