மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் வலசை வரும் பறவை இனமான மூன்று பூநாரைகள், வன்கலை பறவைகள் சரணாலயத்தின் ஊடாக காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு செல்லும் உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பிகளில் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் சிக்கிய பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், ஒன்று பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்தப் பறவைகள் தற்போது மன்னார் மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த பறவைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது மன்னார் தீவிற்கு வலசை வரும் பறவைகள் வருகை தரும் உச்சக் காலமாகும். இந்த வெளிநாட்டுப் பூநாரைகளை நேரில் காண்பதற்காக ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், இந்தப் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியிலும், இந்தத் துயரமான விபத்து காரணமாக வருகை தந்த இரண்டு வலசை வரும் பறவைகள் உயிரிழந்துள்ளன.

