டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பல அடுக்குகள் கொண்ட வீடமைப்புச் செயற்திட்ட நிர்மாணத்திற்கு உதவுவதற்காக ‘அரசாங்கத்தின் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்துக்கு’ ரூபா 300 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு மக்கள் வங்கி முன்வந்துள்ளது.
Mahajana Mehewara என்ற பெயரின் கீழ் மக்கள் வங்கி முன்னெடுத்து வருகின்ற நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகவும் மக்கள் வங்கியின் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலும் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சமூகங்கள் மற்றும் நிலைபேற்றியலுக்கு ஆதரவளிப்பதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இந்த நன்கொடைக்கான அடையாளக் காசோலையைக் கையளித்தனர். மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி நாலக விஜயவர்த்தனவும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தார்.
2025 நவம்பரில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய தித்வா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா நகர்ப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுகள் அங்கு குடியிருப்புக்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியதுடன் பெருந்தொகையான குடும்பங்கள் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதற்கு தகுந்த நடவடிக்கையாக பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதற்காக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நிரந்தர வீடமைப்புச் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கி இந்த முயற்சிக்கு வழங்கியுள்ள பங்களிப்பு தேசிய ரீதியாக அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன் அனர்த்தத்திற்குப் பின்னரான மீட்சி மற்றும் சமூக மீள்திறன் ஆகியவற்றுக்கு உதவுவதில் வங்கி தொடர்ந்து ஆற்றி வருகின்ற பங்களிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

