மட்டக்களப்பு பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரையும் சட்டவிரோத 47 சுருக்குவலை மற்றும் டைனமட் பாவித்து மீன் பிடித்து கடல் வளத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து கடல் வளத்தை பாதுகாக்க மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரம் முன்வரவேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(06) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலை நம்பி மீன் பிடியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரத் தொழிலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சட்டவிரோதமான செயற்பாடுகளாக டைனமட் அடித்து மீன் பிடிப்பது மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே அதை நிறுத்துவதற்கு கடற்றொழில் நீரியல் வள உதவிப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மட்டக்களப்பு நாவற்குடா பூநொச்சிமுனை தொடக்கம் பெரியநீலாவணை வரையும் மீனவர் சங்கத்தின் தலைவர்கள் சிலர் உட்பட 47 பேர் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சுருக்குலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள உதவிப் பணிப்பாளர் விசேட அதிரடிப்படை, கடற்படையுடன் இணைந்து இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதுடன் இந்த கடல் வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரமிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிப்பதால் கீரி மீன்பிடி வலையை வைத்து மீன் பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என கிழக்கு மாகாணத்தின் மீனவர் தொழிற் சங்கத்தின் தலைவர் நற்குணம் பத்மநாதன் ஈ.பி.டி.பி கட்சியிடம் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவது தொடர்பாக வெளிக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஊடக மாநாட்டை நடாத்துகின்றேன்.
இந்த கீரி மீன் பிடிக்கும் தொழிலில் சட்டவிரோதமான சுருக்குவலைகளை பாவித்து பூநொச்சிமுனை, காத்தான்குடி, செட்டிபாளையம், தேற்றாத்தீவு, மாங்காடு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, கல்லாறு பெரியநீலாவணை வரை இந்த மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இரவில் மீன் இறங்கி வருகின்ற மீன்களை இந்த சுருக்குவலையால் வளைத்து ஒருவர் ஆயிரம் கிலோகிராம் மீன்களை பிடித்து வந்து அதனை மிகவும் குறைந்த விலையில் கிலோ 300 ரூபாய் வீதம் விற்று வருகின்றனர்.
இருந்த போதும் இங்கு பல ஆண்டுகளாக இந்த கீரி வலையை நம்பி தொழில் செய்து வருகின்ற மீனவர்களுக்கு ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ மட்டும் பிடிபடுகிறது. எனவே இந்த சட்டவிரோத சுருக்குவலை தொடர்பாக எங்களுக்கு கிடைக்கும் தகவல் மாதிரி கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் மற்றும் அந்தந்த பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களுக்கும் தகவல் கிடைக்கும்.
இவ்வாறு தகவல் கிடைத்தும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிப்பதை நிறுத்தாவிட்டால் எதிர் காலத்தில் மீன்கள் இல்லாமல் போய்விடும்.
மீன்பாடும் தேன் நாடாம் மட்டு மாநகரிலே இன்று கீரி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஒரு கிலோ மீன் கூட கிடைப்பதில்லை காரணம் இறங்கி வருகின்ற இடத்தில் சுருக்குவலையை வைத்து அவர்கள் சட்டவிரோதமாக மீன்கள் பிடிக்கின்றனர்.
ஒரு படகில் ஆயிரம் கிலோ என்றால் ஒரு நாளைக்கு 10 படகு போனால் 10 ஆயிரம் கிலோ கீரி பிடிக்கப்படுகிறது. இதனால் மீன்வளம் கடல்வளம் அழிக்கப்படுகின்றது. எனவே இதனை நிறுத்தாவிட்டால் அத்தனை கடல் வளமும் அழிக்கப்படும்.
கீரி மீன் பிடிக்கும் மீனவர்கள் சிறிய கொட்டகைக்குள் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடிப்போர் மாடிக்கு மேல் மாடி கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே ஏனைய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக சுருக்குவலை பாவித்து மீன் பிடிப்பவர்கள் அதனை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

