கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் 10-க்கும் அதிகமான பசு மாடுகள் இரவு நேரங்களிலும், பகல் வேளைகளில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த நிலையிலும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பசு மாடு ஒன்று, கன்று ஈன்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில் மேய்ச்சலுக்காக கட்டி விடப்பட்டிருந்தது.
பின்னர் மாலை நேரத்தில் சென்று பார்த்தபோது குறித்த கால்நடை காணாமல் போயிருந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக இடம்பெறும் கால்நடை திருட்டுகளை தடுக்க பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

