நாட்டில் உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் நோக்கில், உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடையை நியாயமான விலையில் கொள்முதல் செய்வதற்கான சிறப்பு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு வேளாண் பொருட்கள் சேகரிப்பு மையத்தில், ஒரு விவசாயியிடமிருந்து தினமும் அதிகபட்சமாக 1000 கிலோகிராம் வரை உருளைக்கிழங்கு, ஒரு கிலோ ரூபா 220 என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நிலவிவரும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், அப்பகுதி விவசாயிகள் தங்களது அறுவடைகளை குறித்த மையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்து வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் உருளைக்கிழங்கு கையிருப்புகளை, நாடு முழுவதும் உள்ள லங்கா சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக மானிய விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதுடன், நுகர்வோரும் தரமான உள்ளூர் உருளைக்கிழங்குகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

