இலங்கை தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் இறுதி நாள் நிகழ்வு இன்று (18 ) கதிரவெளி வாகரையில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை இதனை நாடாத்தியது. “உயிர் காத்த கஞ்சி ” வலி நிறைந்த வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் என்ற தொனிப்பொருளில் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய நாள் கதிரவெளி வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசைகள் நடைபெற்று அர்ச்சனை இடப்பட்டது.
அத்துடன் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பகிரப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் கதிரவெளி திலகவதியார் இல்ல மாணவர்களுக்கு உயிர் நீத்த உறவுகளின் நினைவாக அன்னதானம் வழங்கப்பட்டது.
மே12 தொடக்கம் மே18 வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
குறித்த நிகழ்வு கோறளை வடக்கு பிரதேச கிளை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் .இரா.சாணக்கியன். இ.சிறிநாத் மாநகர சபை மேயர் சிவம் பாக்கியநாதன் மற்றும் தமிழரசு கட்சி சார்ந்த பிரதேச சபை தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

