விரிவுரையாளர் கொலை ; கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தமை உறுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

குறித்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியமளித்தனர்.

சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் கூறினர்.

இதனையடுத்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியல் காலத்தையும் அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் ஆஜராகினார்.

முதலாம் சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும், இரண்டாம் சந்தேக நபரான விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *