சீரற்ற வானிலை; 28,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

அந்நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 7,482 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 28,933 பேர் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,051 குடும்பங்களைச் சேர்ந்த 4,566 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,204 குடும்பங்களைச் சேர்ந்த 4,558 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், காலி மாவட்டத்தில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேரும், வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் இந்த வானிலை பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையால் 02 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 836 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதில் அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அங்கு 02 வீடுகள் முழுமையாகவும், 530 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 08 மாவட்டங்களின் 34 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தே இந்த தகவல்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *