திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

குறித்த பேரணி நேற்று (23) காலை 9.00 மணியளவில் திருகோணமலை உவர்மலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகி, திருகோணமலை பஸ் நிலையத்தை அடைந்தது.

 

அங்கு, போதைப் பொருள் பாவனைக்கு எதிராக பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

 

நாட்டில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் “ரட்டம எக்கட்ட” தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து இம்முறை இளைஞர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

சமூகத்தின் பல்வேறு வயது பிரிவினரிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான பல பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதுடன், குறிப்பாக இளைஞர் தலைமுறை இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு தீங்கான நிலையை உருவாக்கும் அபாயம் காணப்படுகின்றது.

 

அதன்படி 2026 தேசிய இளைஞர் தினம் “Say No” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

 

போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் முயற்சியில் பொதுமக்களை செயற்பாட்டுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில், போதை பொருள் பாவனைக்கு எதிராக ஓவியங்கள், போஸ்டர்கள், வீதி நாடகங்கள், பதாகைகள், கோஷங்கள், துண்டு பிரசுர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு படைப்பாற்றல் நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த நிகழ்வில், வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மீமன, எஸ். குகதாசன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் என். குஹேந்திரா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யுவராஜ் குமார், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *