இலட்சியப் பாடல் பாடிய இளைஞரை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் – சாணக்கியன்

வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சிய பாடல் ஒன்றை பாடியமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மாலை சந்திவெளி எக்கோ விளையாட்டுக்கழகத்திற்கு கடினப் பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்து அவர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தளவில் குறிப்பாக அனுர குமார திசாநாயக்க உட்பட தற்போது அமைச்சராக இருக்கின்ற பலர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என எங்களுடன் வீதி வீதியாக வந்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது ஒரு பாடலுக்கு பயப்படுகிறார்கள் என்றால் ஒரு வேடிக்கையான விடயமாகும். புலிக்கொடி இருக்கக் கூடாது புலிகளுடன் சம்பந்தப்பட்ட சீருடை இருக்கக் கூடாது என கடந்த காலத்தில் கூறினார்கள்.

இந்தப் பாடலில் அவ்வாறான எதுவும் இருக்கவில்லை. இது ஒரு எழுச்சியான பாடல் அதனால் அவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளார்கள். இது ஒரு மோசமான விடயம் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என இதன்போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ். சுதாகரன், உபதவிசாளர் கு. பத்மநீதன் மற்றும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *