கடந்த 02ம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி பாடகர் கணேஸ்குமார் சங்கீசனை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கிளிநொச்சி மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்தந்தை கஜெயக்குமார், தவத்திரு வேலன் சுவாமிகள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், அரசியல் கட்சி சார்ந்தோர் மற்றும் பொது அமைப்பு சார்ந்தோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும், வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாகப் பாடி வந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்தின் போது விடுதலை செய் விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய், சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கட்டும்! சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே, பாட உரிமை எங்கள் உரிமை! பறிக்காதே பறிக்காதே, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே, அடக்குமுறைக்கு நிறுத்து! கலைஞர்களின் குரல்வளையை நெரிக்காதே, அநீதியான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு, சொல்லிசைப் பாடகன் குற்றவாளியா? கிளிநொச்சிக் கலைஞனை உடனே விடுதலை செய், பாடினால் சிறையா? பேசினால் கைதா? ஏதேச்சதிகாரக் கைதுகளை, உடனே நிறுத்து, கலைஞர்களின் படைப்புரிமை சட்டப்பூர்வமானது! சட்டம் வழங்கிய உரிமையை அதிகாரத்தால் பறிக்காதே, சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை மதிக்கக் கற்றுக்கொள்! கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு போன்ற கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

