தென்னிலங்கை மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள், தொழில் உரிமை, வாழ்வுரிமை இன்றி கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விடயம் புதுமையான ஒன்று அல்ல, அது பொது வெளியில் பேசுபொருளாக மாறவில்லை என்பதே உண்மை. சர்வதேச மன்னிப்புச் சபை அதனை ஆய்வுக்கு உட்படுத்தி ழுழுமையான அறிக்கையை வெளியிட்டு சர்வதேச மயப்படுத்தியுள்ளதோடு, பேசுபொருளாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஆனால் இந்த விடயம் அம்மாக்களினதும் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற வரும் அப்பிரதேச அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கும் தெரியும். இந்த மக்கள் உரிமை அற்றவர்களாக, சுதந்திரமற்றவர்களாக சிங்கள மக்களிடையே கரைந்து விட வேண்டும் எனும் பேரினவாத இன அழிப்பு சிந்தனை காரணமாகவே அவ்வாறு இன்று வைக்கப்பட்டுள்ளனர். இதனை இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல் வேண்டும்.
இந்த விடயத்தை மலையகத் தமிழ் அரசியல்வாதிகளும் அறிந்துள்ளனர், அவர்களும் பேரினவாத தேசிய கட்சிகளுக்குள் மறைந்து நின்று அரசியல் செய்வதால் அவ் அரசியலுக்குள் அவர்களும் கொத்தடிமைகளாகி தமது மக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது மௌனிகளாகி உள்ளனர் என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது. அல்லது இது தொடர்பில் கதைத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் எனும் பயமும் காரணமாக இருக்கலாம்.
தற்போதைய ஆட்சியாளர்களும் தமது நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்காக அட்டன் பிரகடனத்தில் மலையக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து; மலையக மக்களுக்கு கொடுக்க போதிய நிலமில்லை என்று கூறுவதும், அவர்களுக்கு தொடர்மாடி வீடுகளை கட்டப்போவதாக கூறுவதும் அவர்களை நிலமற்றவர்களாகவே பெருந்தோட்டங்களுக்குள் முடக்கி அடிமைகளாக வைத்திருக்கும் பேரினவாத உள்நோக்கம் கொண்ட சிந்தனையிலாகும். அதேநேரம் அரசின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் இருக்கும் பயன்படுத்தாத காணிகள், பயன்படுத்தி கைவிடப்பட்ட காணிகள் மற்றும் ஏனைய நிலங்களை பெரும் முதலீட்டாளர்களுக்கு கொடுக்க திட்டம் வகுத்துள்ளனர். இது எவ்வாறு? அரசாங்கம் மலையகத் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிலைநாட்ட பின்வாங்குவது பேரினவாத இன அழிப்பு மற்றும் படுகொலை சிந்தனையுடனேயே என்பதே எமது கருத்து நிலைப்பாடு.
தென்னிலங்கை மலையக தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான அடிப்படை தேவைகளை கேட்கவோ, கூட்டாக குரல் எழுப்பவோ முடியாத வகையில் அடிமைகளாக மட்டுமல்ல பெரும்பான்மை சிங்கள மக்களால் சுற்றிவளைக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். வெளியே தெரியாத வகையில் தாம் தாக்கப்படுவோம் எனும் பயத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். இதுவே உண்மையாகும்.
தற்போது வெளிவந்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னிலங்கை மலையக தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வறிக்கை விடயத்தில் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது? என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுவதற்கு மலையக அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசியல் கலந்துரையாடுதல் ஆரம்பித்தல் வேண்டும். ஏனெனில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து பிரதேச தமிழர்களும் கடந்த காலத்தில் மட்டுமல்ல தற்போதும் பல்வேறு வடிவங்களில் இனப்படுகொலைக்கும், இன அழிப்பிற்கும் முகம் கொடுக்கின்ற காலக்கட்டம் இது. கூட்டு அரசியல் செயல்பாடே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மலையக தமிழ் அரசியல் தலைமைகள் கூட்டு செயல்பாட்டுக்கு உடன்படவேண்டுமென வேண்டுகோள் விடுகின்றோம்.
மலையக சமூக ஆய்வு மையம்

