செப்டம்பரில் சாரதிகளுக்கு புள்ளி குறைப்பு முறைமை அறிமுகம்

இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

வீதிகளில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்தவும், சாரதி ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கடுமையான சட்ட அமுலாக்கம் அவசியம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் வீதி விபத்துக்கள் காரணமாக 2,750 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதில் உந்துருளி சாரதிகளும், பாதசாரிகளுமே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கும் 24 புள்ளிகள் வழங்கப்படும்.

 

போக்குவரத்து விதிகளை மீறும் போது இந்த புள்ளிகள் குறைக்கப்படும்.

 

தொடர்ச்சியாக தவறுகளை இழைத்து புள்ளிகளை இழக்கும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படும்.

 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நிலவிய நிர்வாக சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாகவே இந்த திட்டம் இதற்கு முன்னர் தாமதமடைந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது அங்கு ஊழலை ஒழிக்கவும், வினைத்திறனை அதிகரிக்கவும் ‘இ-மோட்டாரிங்’ திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *