மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் – மிச்நகர் – அல்- அஷ்ரப் வித்தியாலயத்தில் தற்போது பணியாற்றிவரும் அதிபரை இடமாற்றம் செய்யவேண்டாம் என்றும் இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திக்கப்படவேண்டும் எனவும் கோரி பொதுமக்கள் இன்று(11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்ததனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்லவில்லை. இதனால் பாடசாலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பெற்றோர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்ட இடத்திற்கு ஏறாவூர் பொலிஸார் வருகை நந்திருந்ததுடன், வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத், பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி யதிகாரி ஏஎல். அபுள்ஹஸன் ஆகியோரும் வருகை தந்து ஆர்ப்பாட்டக்கார்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இப்பாடசாலை மிகநீண்டகாலமாக தகுதியான அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்றி புறக்கணிக்கப்படுவதனால் கல்வித்தரத்தில் பின்தங்கிக் காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முறையிட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடகாலமாக அதிபராகக்கடமையாற்றிவருபவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக குறிப்பிடப்பட்டது.
எனவே இந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்படும்வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி பெற்றார்கள் வீதியில் நின்ற பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்பாடசாலையில் தற்போது பதில் அதிபர் பொறுப்பிலுள்ளவருக்கெதிராக அலுவலகமட்ட விசாரணை நடைபெற்றுவருவதனால் விசாரணை முடியும்வரை அவர் தற்காலிகமாக வேறுபாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவாக சுமுகமான தீர்வு காணப்படுமென்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் உறுதியளித்தார்.
இதையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாடசாலை வாயில் திறக்கப்பட்டடு ஆசிரியர் ஒப்பமிட்டனர்.

