மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில் இன்று மாலை பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் ஒருவர் இறங்கிய நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் வழங்கினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்புப் படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற கடுமையான போராட்டத்தின் பின்னர், இரவு 7.30 மணியளவில் வடிகானுக்குள் சிக்கியிருந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானவர் என்றும், மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

