கல்லடி ஆலய மோதலை தடுத்த முதியவரின் வீடு சேதம்; குழுவொன்று தப்பியோட்டம்

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்று வரும் திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தடுத்த வயோதிபரின் பூட்டியிருந்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீட்டை உடைத்து யன்னல், அலுமாரி கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று(15) பகலில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது பற்றி தெரியவருவதாவது

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நொச்சிமுனை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் அங்கிருந்த முதியவர் ஆலயத்தில் சண்டை பிடிக்கக் கூடாது எனத் தெரிவித்து மோதலைத் தடுத்த போது அவர் கீழே வீழ்ந்து தலையில் காயம் ஏற்பட்டது.

 

இந்த நிலையில் நொச்சிமுனை இசை நடனக் கல்லூரி வீதியில் உள்ள குறித்த முதியவரின் வீட்டிற்கு சம்பவ தினமான நேற்று பகல் 12.00 மணியளவில் குறித்த வீட்டின் உரிமையாளரான முதியவர் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு சமுர்த்தி காரியாலயத்துக்கு சென்றுள்ளனர்.

 

இதன் போது அங்கு இருவர் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள நிலையில் வீடு பூட்டி இருந்ததையடுத்து மதிலின் மேலால் குதித்து வீட்டின் கதவை உடைத்து யன்னல் அலுமாரிகளின் கண்ணாடிகளை உடைத்து வீட்டை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

 

இதையடுத்து வீடு திரும்பியவர்கள் வீடு உடைத்து சேதப்படுத்தி உள்ளதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் வீதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தியிருந்த சிசிரிவி கமராக்களில் பதியப்பட்டிருந்த காட்சிகள் மூலம் குறித்த நபர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் அவர்கள் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை இந்த நபர்கள் அந்த பகுதியில் கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும்இவர்களை பல தடவை பொலிஸார் கைது செய்து பிணையில் வெளிவந்துள்ளவர்கள் எனவும் இவர்கள் தொடர்ந்து இந்த பகுதியில் வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் தெரிவித்தும் இவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *