சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களுக்கு சிறப்பு நீதிமன்றம்; மரண தண்டனை அவசியம் – அந்தனிசில் ராஜ்குமார்

இலங்கை முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகம் கற்பழிப்புக்கள் மனித குலத்துக்கு எதிரான போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் நாளாந்தம் அதிகரித்து செல்கிறது. எனவே இந்த குற்றச் செயல்களை தடுக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து குறுகிய காலத்தில் அதி உச்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கடந்த 17 ம்திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் தன்னுடைய 12 வயது மகளை ஆண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினால் அவமானம் தாங்க முடியாது தந்தை தற்கொலை செய்து கொண்டார் இது இலங்கை தேசத்துக்கு ஒரு பரிதாபகரமான செயல் ஆதலால் இதனை கருத்தில் கொண்டு இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க வேண்டும்

 

இதனை தடுக்காவிட்டால் சிறுவர் துஷ்பிரயோகத்தால் அந்த சிறுவர் மட்டுமல்ல அவரது பெற்றோர், உறவினர்கள் உட்பட அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றது.  எனவே இவ்வாறான குற்றச் செயலை தடுப்பதற்கு அதி உச்ச தண்டனை மரண தண்டனை வழங்க வேண்டும்.

 

இத்தோடு அந்தந்த பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் பிரஜா சக்தி தலைவர்கள், அந்த ஊரில் இருக்கும் தேவாலயங்கள் ஆலயங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து கூடிய கவனம் செலுத்தி இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் விற்பனை செய்யும் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம் பெறுவதை தடுக்க வேண்டும்.

 

மாவட்டத்தில் தாய் தந்தை தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் அல்லது தாய் இல்லாமல் தந்தையுடனும் தந்தை இல்லாது தாயுடனும் 18 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு இல்லாத சிறுவர்கள் இருக்கின்றனர்.

 

எனவே இவர்களுடைய பாதுகாப்பில் கருத்தில் கொண்டு கிராம உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜா சத்தி, கூடுதல் கவனம் செலுத்தி இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

 

அதேவேளை இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த   குரலாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மற்றும் பெண்கள் கற்பழிப்பு செய்த குற்றவாளிகளுக்கு  ஒரு சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து ஒரு குறுகிய காலத்தில் இவர்களுக்கான மரண தண்டனை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில்  குரல் கொடுக்க வேண்டும்.

 

இவ்வாறு மரண தண்டனை வழங்கினால் இந்த குற்றச் செயலை தடுக்க முடியும் இல்லாவிட்டால் தொடர்ச்சியாக இந்த குற்ற செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடமும் நாட்டின் ஜனாதிபதியிடமும் வினயமாக கேட்டுக் கொள்வது நாடளாவிய ரீதியில் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்ற சிறுவர் துஷ்பிரயோகம் கற்பழிப்புக்கள் மனித குலத்துக்கு எதிரான போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து குறுகிய காலத்தில் தண்டனை வழங்கவும்.

 

அதேவேளை சட்டத்தரணிகளிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கின்றோம் இவ்வாறான சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் கற்பழிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர்கள் சார்பாக ஆஜராகி வாதிடாமல் இருந்தால் நீங்களும் குற்றம் செய்பவர்களை தடுப்பதற்கான உதவி புரிபவர்களாக மாறமுடியும் சட்டதரணிகள் தங்கள் பக்கம் இருக்கின்றனர் என்ற காரணத்தினால் பணத்தை வைத்து என்னவும் செய்ய முடியும் என்ற காரணத்தினாலும் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர்.

 

எனவே சட்டத்தரணிகள் இவ்வாறான குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு சார்பாக ஆஜராகி வாதிடாமல் இருந்தால் இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள்  செய்யும் பெரிய உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *