அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் யோகா தின நிகழ்வு இன்று (21) அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்றது.

 

அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இதன்போது யோகாசனப் பயிற்சிகள் மற்றும் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.

 

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெயராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், உதவிப் பிரதேச செயலாளர் எம். ராமக்குட்டி, ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர். தர்மதாச, திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஆர். சுபாகர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் ஆலய தர்மகர்த்தாக்கள், சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், கமநல சேவை அதிகாரிகள், இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாளர்கள், மாதர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அக்கரைப்பற்று இந்து இளைஞர் அமைப்பினரால் பங்கேற்பாளர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

செல்வி வினாயக மூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *