5 ஆண்டுச் செயலாற்றுகை தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம்

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (23) காலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் “இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் காணிப் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். காணிப் பிணக்குகள் எதுவுமற்ற 8,600 பேர் காணி ஆவணங்களைக் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தில் இதற்கான முன்னேற்றம் எட்டப்படவில்லை என கவலை வெளியிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டதாவது: ‘கிளிநொச்சி மாவட்டத்தில் பல தொழில் முயற்சியாளர்கள் தமக்குரிய காணி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், வங்கிகளில் கடன்களைக் கூடப் பெற முடியாத நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். மேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் மக்களுக்குக் காணி உரித்துக்களை வழங்கும் ‘ஹிமிகம’ வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடனும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

போர் காரணமாக காணி ஆவணங்கள் மாவட்டச் செயலகங்களிலும் இல்லை மக்களிடமும் இல்லை. இதனால் மக்கள் காணிப் பிணக்குகளுடன் ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். நிலைமை இவ்வாறிருக்க, அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய நிலையில், சில அதிகாரிகள் பொறுப்பற்று மக்களின் காணிப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் வகையிலேயே செயற்படுகின்றனர்.

 

திங்கட்கிழமைகளில் அலுவலகங்களுக்குச் சென்றால் கூட, காணி தொடர்பான அதிகாரிகளைச் சந்தித்துப் பேச முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் என்னிடம் நேரடியாகவே முறையிட்டுள்ளனர்.

 

கடந்த காலங்களில் காணிகள் வழங்கல் மற்றும் பிணக்குகளைத் தீர்ப்பதில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. அதிகாரிகள் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை. நீங்கள் சுயாதீனமாகவும், நீதியான முறையிலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

 

மாவட்டச் செயலாளரும், மாகாண காணி ஆணையாளரும் பல முயற்சிகளை எடுத்தாலும், கீழ் மட்டத்திலுள்ள அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு காண்பதற்கு அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பைக் கோருகின்றேன்,’ என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. செயலாற்றுகையில் பின்னடைவைக் கண்டுள்ள பிரதேச செயலகங்களின் காணி உத்தியோகத்தர்களிடம் இதன்போது விளக்கங் கோரப்பட்டதுடன், அவர்களுக்கான புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அவை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் பணிக்கப்பட்டது.

 

அலுவலர்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட வசதிகள் செய்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் திறம்படப் பணியாற்ற வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். அத்துடன், அலுவலர்களின் தனிப்பட்ட செயலாற்றுகை முன்னேற்றங்கள் இனித் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என மாகாண காணி ஆணையாளர் இதன்போது குறிப்பிட்டார்.

 

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மற்றும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிப் பிணக்குகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மேலதிக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி அலுவலர்கள், மாவட்டச் சிரேஷ்ட நில அளவையாளர், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் தூய்மை இலங்கைச் செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *