மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (25) கல்லடி – வேலூர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

 

டெங்கு நோய் அதிகம் பரவும் மாவட்டங்களுள் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னமின் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம் பெற்றது.

 

மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வேலூர், கல்லடி, கூழாவடி மற்றும் சந்திவெளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால், அப்பகுதிகளை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

இதன்போது வடிகால்கள், வீடுகள், வெற்றுக் காணிகள் உள்ளிட்ட பகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

நீர் தேங்கியிருந்த கொள்கலன்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களினால் உடனடியாக அகற்றப்பட்டது.

 

இவ்வாண்டு மாவட்டத்தில் பதிவான டெங்கு நோயாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டது.

 

டெங்கு நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அரசாங்க அதிபர் வலியுறுத்தியதுடன், சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *