மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் மாவேற்குடா ஆலயத்தின் மஹா கும்பாவிஷேகம் இன்று (26) வேத ஆகம முறைப்படி பக்தி பூர்வமான சூழலில் நடைபெற்றது.
அதிகாலை முதல் ஆரம்பமான யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் மற்றும் விசேட கிரியைகளைத் தொடர்ந்து, ஆலய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாவிஷேகம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து விசேட அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை மற்றும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றன.
ஆலய அரங்காவலர் சபையின் அழைப்பின் பேரில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு இறை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இந்து சமய குருமார்கள், சமூகப் பிரமுகர்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மிக எழுச்சியுடன் மஹா கும்பாவிஷேகத்தை தரிசித்தனர்.

