வீட்டில் தனியாக இருந்தபோது மயங்கி விழுந்த அரசாங்கப் பாடசாலையின் ஆசிரியை மரணமடைந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவு 2ஆம் குறுக்கு, சூசையப்பர் வீதி, தன்னாமுனையில் உள்ள வீட்டில் வசித்து வந்த 57 வயதுடைய செல்வராசா நவஜோதி என்பவரே மரணித்துள்ளார்.
சம்பவ தினம் இந்த ஆசிரியையின் மூத்த சகோதரியின் இளைய மகள் இரவு 7.30 மணியளிவில் வீட்டுக்குச் சென்று பார்க்கும்போது வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை (சித்தி) மண்டபத்திற்குள் குப்புற விழுந்து மயங்கிய நிலையில் சரிந்து கிடந்துள்ளார்.
உடனடியாக அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் உதவியுடன் அவசர நோயாளர் காவு வண்டிக்கு 1990 இற்கு அழைத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்து, பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த போதும் சிகிச்சைப் பலனின்றி ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
இவருக்கு குருதி அழுத்தம் இருந்து வந்ததாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வுப் பரிசோதனையில் இவருக்கு தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மரணித்த ஆசிரியை தனது ஆசிரிய சேவைக்குரிய நேரம் போக மீதி நேரத்தில், மாவட்ட சர்வ மத ஒன்றியம், தேசிய சமாதானப் பேரவை உள்ளிட்ட தன்னார்வ உதவி அமைப்புக்களுடன் இணைந்து இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, சமாதான செயற்பாடுகளில்; ஈடுபட்டு வருபவர் என்று செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தகப்பனை இழந்த தனது சகோதரியின் இரண்டு பெண் பிள்ளைகளையும் இந்த ஆசிரியையே பராமரித்து வந்தார் என்றும் அவர்களை பல்கலைக்கழக படிப்பு வரை படிக்க வைத்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

