மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வடமேல் மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும் பதிவாகக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

