செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை மாற்றம்

உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் கனிய எண்ணெய் விலை திருத்தம் செய்யப்படுவதைப் போலவே, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு இந்த மாத இறுதியிலும் அதற்குரிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *