முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பொலிஸாரின் ஆயுதங்களை இளைஞர், யுவதிகளிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (15) இடம்பெற்றபோது, பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல், கெரடமடு வரையான பகுதிகளில் அதிகளவில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக மன்னாகண்டல் மற்றும் கெரடமடு பேராற்றுப் பகுதிகளில் தினந்தோறும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டாலும், அதையும் மீறி இச்செயற்பாடுகள் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில், பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றாலும், அங்கு சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களிடம் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் கையூட்டு பெற்றுச் செல்வதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக முன்னர் சுமார் 6 அடி அகலமாக இருந்த ஆறுகள் தற்போது 45 அடி அளவுக்கு அகலமடைந்துள்ளதாக மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக மக்கள் மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்ற போதிலும், சட்டவிரோத மணற்கொள்ளை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கசிப்பு, கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான செயற்பாடுகள், மணல் மற்றும் கிரவல் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கினால், அவற்றை ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சுக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், பிரதேசத்தில் 19 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளதுடன், 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக சுமார் 75 பொலிஸ் உத்தியோகத்தர்களே கடமையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை கசிப்பு உற்பத்தி தொடர்பில் 702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் சுமார் 37 இலட்சத்து 27,500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடா உற்பத்தி தொடர்பில் 45 வழக்குகளும், கஞ்சா தொடர்பில் 25 வழக்குகளும், ஹெரோயின் தொடர்பில் 33 வழக்குகளும், சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகள் தொடர்பில் 14 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் 69 வழக்குகளும், சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் 9 வழக்குகளும், ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் 91 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுவதாகவும், அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் குறிப்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் தகவல் வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு பதிலளித்த ரவிகரன், சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுவதாக சபை முன்னிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பொலிஸாரால் இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால், தங்களது ஆயுதங்களை ஒப்படைக்குமாறும், இளைஞர், யுவதிகள் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, கடந்த காலத்தில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் தற்போது இரவு நேரங்களில் பெண்கள் கூட பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி. தெரிவித்தார்.
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த விடயத்தை பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமர்விலும் எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

