சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் விசேட பாதுகாப்பு வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
சவூதி சிவில் பாதுகாப்புத் திணைக்களம், ‘தேசிய அவசர எச்சரிக்கை தளம்’ ஊடாக ஜெட்டா, மக்கா மற்றும் தாயிப் உள்ளிட்ட நகரங்களுக்கு “சாத்தியமான ஆபத்து” தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அவசர எச்சரிக்கை செய்தி கிடைத்தவுடன் பொதுமக்கள் பதற்றமடையாமல் உடனடியாக வீடுகள் அல்லது கட்டிடங்களின் உட்புறப் பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜன்னல்கள், பால்கனிகள், திறந்தவெளிகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் பயணிப்பவர்கள், பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தாமல், பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்துகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்வது அல்லது அவை தொடர்பில் கருத்துகளை வெளியிடுவது சவூதி சட்டத்தின் கீழ் குற்றமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவசரநிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில், மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களில் வசிப்பவர்கள் 911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தையும், சவூதி அரேபியாவின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் 998 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவசர உதவி தேவைப்படும் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைப் பிரஜைகள், ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 056 098 6671 ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

