சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் நேற்று (18) நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.
அனோஜனின் தாயார், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த ரிசாத் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பான செய்திகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஊடாக சவூதி மன்னருக்கு அவசர கூட்டு மேன்முறையீடு ஒன்றை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஊடாகவும் சவூதி அரசாங்கத்திடம் கருணை கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் அரசியல் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

