புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவாட் (MW) கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் நினைவுப் பலகையைத் திறந்து வைத்து இத்திட்டத்தை நாட்டுக்குக் கையளித்தார். தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தைப் பூர்த்தி செய்ய முடியும்.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வளிமண்டலத்தில் கலக்கும் காபனீரொக்சைட் (CO2) வெளியேற்றம் சுமார் 6,440 மெட்ரிக் தொன்களால் குறைக்கப்படும்.
டீசல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் 2.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் ஆண்டுதோறும் சேமிக்கப்படுவதோடு, இதன் மூலம் நாட்டிற்கு வருடாந்தம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தப்படுகிறது.
முழுமையாக உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் போது, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 150 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பாடசாலைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கான சமூக நலத்திட்ட உதவிகளையும் ஜனாதிபதி அடையாள ரீதியாக வழங்கி வைத்தார்

