மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு கலை இலக்கியப் போட்டிகள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறுகின்ற மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்ற கலை இலக்கியப் போட்டிகளில் ஆற்றுகை தொடர்பான அம்பாரை மாவட்ட மட்ட தமிழ் மொழி மூலமான போட்டிகள் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் குறிப்பாக முஸ்லிம்களது இஸ்லாமிய கீதம், பொல்லடி,  கஸீதா குழு, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், காவடி, நாட்டுக் கூத்து இவ்வாறான பல போட்டிகள் நடைபெற்றன.
மாவட்டத்தில் இருக்கிற மிக முக்கியமான ஆறு பேர்களைக் கொண்ட இரண்டு நடுவர்கள் குழாம் அமைக்கப்பட்டு இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன.
நடுவர்களாக சிரேஷ்ட வைத்தியர் எம். ஐ. எம். முபாரிஸ், ஊடக வித்தகர் கவிஞர் எஸ். றபீக், காரைதீவு வீ.ரீ. சகாதேவராஜா, கல்முனை  சாஹிராக் கல்லூரியின் ஆசிரியர் எம்.ஐ. எம்.அமீர், நிந்தவூர் ராஜகவி ராஹில், காரைதீவு ஓய்வுபெற்ற இசை ஆசிரியை புவனேஸ்வரி உட்பட ஆறுபேர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்டத்தினுடைய தமிழ், முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து போட்டியாளர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் மாகாண மட்ட போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல் தௌபீக் தெரிவித்தார்.
அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் கூடுதலான போட்டியாளர்களைக் கொண்டு நடாத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதற்குரிய நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொள்ளும் எனவும் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மேலும் தெரிவித்தார்.
திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்களான கல்முனை வடக்கு திருமதி நகுலா, சாய்ந்தமருது ஏ.எம். தௌபீக், மாவட்ட கலாசார அலுவலகத்தின் கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *