கேகாலை சிறைச்சாலைக்கு நீதி அமைச்சரின் விஜயம்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில் கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

சிறைக்கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை மேலும் முறைப்படுத்துவதற்கும், சிறைச்சாலைகளுக்குள் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில் அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காகக் கூட்டு பொறிமுறையொன்றை அமைக்கும் திட்டத்தின் கீழும், கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையில் அப்பொறிமுறையை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடலே நேற்று நடைபெற்றது.

சிறைச்சாலைக்குள் அவசர நிலைமை ஏற்பட்டால் எதிர்கொள்வது குறித்தும், சிறைச்சாலை மோதல்களுக்கு பிரதான காரணமாக அமையும் கைதிகளின் நலன்புரி வசதிகளை மேலும் முறைப்படுத்துவது மற்றும் அரசாங்க நிறுவனங்களின் தலையீட்டுடன் கைதிகளின் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பாகவும் நீதி அமைச்சர் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையின் இடவசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையின் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதிலும் நீதி அமைச்சர் கலந்துகொண்டார்.

குறிப்பாக, இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சர் இதன்போது கைதிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *