மட்டக்களப்பு-சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பகுதியில், சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு ஒன்றுக்கு, கொங்கிறீட் கொட்டுவதற்காக சட்டிங் (பலகை) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரில், கிண்ணையடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி குமாரசிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மற்றுமொருவர், சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

