இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்துவதில் தடைகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தொழிலதிபர் முகேஷ் அம்பானியைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அன்புக்குரிய பிரதமர் அம்பானி, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் என்பதை உணராமல் இருந்ததற்காக எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்திய மக்கள் மீதான உங்கள் ஏகபோக ஆதிக்கத்தைத் தொடர விரும்புகிறீர்கள். இருப்பினும், ஸ்டார்லிங்க் நிறுவனம் போட்டியிட அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, புதன்கிழமை வெளியிட்ட பதிவில், இந்தியாவில் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக சில பெரும் செல்வந்தர்கள் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைகளைத் தடுப்பதாக மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவர்கள் யார் என்பதை மக்களே ஊகித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு எலான் மஸ்க்கின் பெயரைக் குறிப்பிடாமல் விளக்கமளித்திருந்தது. இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைகள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் நியாயமான, பாகுபாடற்ற நடைமுறைகள் அமலில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், முகேஷ் அம்பானியைக் குறிப்பிட்டு எலான் மஸ்க் வெளியிட்டுள்ள புதிய பதிவு, இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

