தங்களின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவினர், களுத்துறை போபுவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் கட்டளையைப் புறக்கணித்து முச்சக்கர வண்டி நிறுத்தப்படாமல் அதிவேகமாகச் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த முச்சக்கர வண்டியை சுமார் 4 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்ற பொலிஸார், நாகொட பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்ததுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் என கருதப்படும் ‘ரஜவத்த சஞ்சு’ என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டியைப் பரிசோதித்தபோது அதிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

