கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதான வீதியை 99 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கும் பணிகள் நேற்று (25.10.2026) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நிகழ்வில் கலந்துகொண்டு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் பூ. ராஜ் வினோத், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் தே. சுஜீவன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

