சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் சந்தித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்துச் செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அனுப்ப சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அனோஜன் சிவராசாவின் எதிர்கால வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாகத் தூதுவர் அவருடன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அவருக்கு உரிய தெளிவை வழங்குவதுடன், தேவையான சட்ட உதவிகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் நடைமுறையிலுள்ள சட்டச் செயன்முறைக்கு அமைவாக முறையாக நீதிமன்றத்தில் முன்வைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அனோஜன் சிவராசாவுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவதில் இலங்கைத் தூதரகம் உறுதியாக இருப்பதாகத் தூதுவர் அமீர் அஜ்வாத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்கால வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனோஜன் சிவராசா, அவரது சட்டத்தரணிகள் மற்றும் இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செயன்முறையில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் முழுமையான மதிப்பளிக்கப்படும் என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அனோஜன் சிவராசாவின் நலன்புரி விடயங்களில் தொடர்ந்து அக்கறை செலுத்துவதற்கும் இலங்கைத் தூதரகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தம்மாம் சிறைச்சாலை அதிகாரிகளைச் சந்தித்துத் தூதுவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

